×

ஏன் எதற்கு எப்படி?: பிரசன்ன ஜோதிடம் என்பது என்ன?

ராசி கட்டத்திற்கு அருகிலேயே நவாம்ச கட்டம் என்ற ஒன்று இருக்கிறதே, அது எதற்கு?
– அபிராமி ராமச்சந்திரன், வியாசர்பாடி.

நவாம்ச கட்டம் மாத்திரமல்ல, ஜாதகத்தைக் கணிக்கும்போது ராசி, பாவம், நவாம்சம், திரேக்காணம், திரிம்சாம்சம், ஸப்தாம்சம், தசாம்சம், துவாதசாம்சம், ஷஷ்டி அம்சம், ஓரை என்று பலவிதமான கட்டங்கள் உண்டு. மிகவும் உள்ளார்ந்து பலன் பார்க்க இந்த கட்டங்கள் பயன்படுகின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான பலன்களைத் தரும். எல்லாவற்றையும் கணக்கிட்டு அதில் வரக்கூடிய விடையைக் கொண்டு, ஜோதிடர் பலன் உரைப்பார். ஆனால், பொதுவாக ராசி மற்றும் நவாம்சத்தை மட்டும் குறிப்பிடுவது நம் வழக்கத்தில் உள்ளது.

ராசியில் உள்ள கிரஹம், எந்த அம்சத்தில் உள்ளது, எந்த கிரஹத்தினுடைய சாரத்தினைப் பெற்றுள்ளது என்பதைப் பார்த்து அதற்கு ஏற்றாற்போல் பலன் உரைக்க பயன்படுகிறது. எல்லாம் இருந்தும், அனுபவிக்கும் அம்சம் இல்லை என்பார்கள் தெரியுமா.. அதனை நமக்குத் துல்லியமாகச் சொல்வதுதான் இந்த நவாம்ச சக்கரம்.

?30 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் ஜாதகம் பார்க்காமலேயே திருமணம் செய்யலாம் என்கிறார்களே, இது சரியா?
– கதிர்வேலன், ராசிபுரம்.

30 வயதிற்கு மேல் அல்ல, எப்போதுமே ஜாதகம் பார்க்காமலேயே திருமணம் செய்யலாம். சற்றே யோசித்து பாருங்களேன். நம் தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் ஜாதகத்தைப் பார்த்தா திருமணத்தை நடத்தினார்கள். அவர்கள் எல்லோரும் நல்லபடியாக குடும்பம் நடத்தவில்லையா. நமக்கு என்ன நடக்க வேண்டும், எந்த மாதிரியான வாழ்க்கைத்துணை அமைய வேண்டும் என்ற விதி இருக்கிறதோ அப்படித்தானே அமையப் போகிறது? இதில், ஜாதகம் பார்த்தால் என்ன, பார்க்காவிட்டால் என்ன? எதற்காக ஜாதகம் பார்க்க வேண்டும் தெரியுமா? நம்முடைய ஜாதகத்தின் அடிப்படையில் என்ன மாதிரியான பலன்கள் நடக்கும் என்பதை அறிந்துகொண்டு, அதற்கு ஏற்றாற்போல் நம்முடைய மனதினை தயார் செய்துகொள்வதற்காகத்தான். ஜாதகத்தைப் பார்த்து பலன் அறிந்து கொள்ளும்போது, அதற்கு ஏற்றாற் போல் நம்மால் திட்டமிட்டுச் செயல்பட முடியும்.

ஜோதிடர்கள் என்பவர்கள் கடவுள் அல்ல, ஆலோசகர்கள். அவர்களின் ஆலோசனையின் படி செயல்படும்போது, வரவிருக்கும் பிரச்னையில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், எந்த வயதிலும் நீங்கள் ஜாதகம் பார்த்து திருமணத்தை நடத்த வேண்டியது இல்லை. மணமக்கள் இருவருக்கும் மனதிற்கு பிடித்திருந்தாலே போதுமானது.

இருவருடைய ஜாதகங்களிலும் உள்ள கிரஹ நிலைகள் பொருந்தியிருந்தால் மட்டும்தான் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் போது, பிடிப்பு என்பது வந்து சேரும். கிரஹங்கள் பொருந்தவில்லை என்றால், பார்க்கும்போதே பிடிக்காமல் போய்விடும். பெண்ணும் ஆணும் பார்த்துக் கொள்ளும்போது, பெற்றோரின் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்துகொள்ளாமல், உண்மையிலேயே பிடித்திருந்தால் மட்டும் திருமணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்படும் திருமணங்கள் நிச்சயமாக நல்வாழ்வினைத் தரும்.

?பிரசன்ன ஜோதிடம் என்பது என்ன?
– ரங்கராஜன், பட்டினப்பாக்கம்.

`ப்ரஸ்னம்’ என்பது வேறு `பிரசன்னம்’ என்பது வேறு. ப்ரஸ்னம் என்றால் கேள்வி என்று பொருள். பிரசன்னம் என்றால் நிகழ்காலம் அல்லது வெளிப்படுவது என்று பொருள். ப்ரஸ்னம் என்பது ஆன்மிகம் சார்ந்தது. பிரசன்னம் என்பது அறிவியல் ரீதியான ஜோதிடம். ப்ரஸ்னம் பார்ப்பது, கேரள முறைப்படி சோழி உருட்டி பார்க்கப்படுவது. அதனை பார்ப்பதற்கு மடி, ஆசாரம், அனுஷ்டானம் அத்தனையும் அவசியம். தாந்த்ரீக முறைப்படி பூஜைகளை செய்து, அதன் பின்னரே கணிக்க முடியும். ஜாதகத்தின் மூலம் நம்மால் அறிய முடியாத பல விஷயங்களையும், அறிவியலுக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யமான விஷயங்களையும் இந்த ப்ரஸ்ன ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள இயலும்.

உதாரணத்திற்கு, திருவனந்தபுரம் அனந்த பத்மநாப ஸ்வாமி ஆலயத்தில் உள்ள பல சுரங்க அறைகள் இந்த ப்ரஸ்ன ஜோதிடம் பார்த்துத்தான் திறக்கப்பட்டன. இன்னும், ஒரு அறை திறக்கப்படாமலேயே இருப்பதன் காரணம், ப்ரஸ்னத்தில் அனுமதி கிடைக்காத காரணத்தால்தான். இந்த முறையில் தனி மனிதனுக்கு இருக்கக் கூடிய அமானுஷ்யமான பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும். ப்ரஸ்னத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் பார்த்துவிட முடியாது. ஒரு சிலருக்கு மூன்று மணி நேரத்தில் பார்த்துவிட முடியும். ஒரு சிலருக்கு மூன்று நாட்கள் வரைகூட நீடிக்கும். ஆனால், பிரசன்ன ஜோதிடம் என்பது அறிவியல் முறைப்படி பார்ப்பது. இது பெரும்பாலும் ஜனன ஜாதகம் இல்லாதவர்களுக்கு அதாவது பிறந்த நேரம் தெரியாதவர்களுக்கு பயன்படுகிறது. இவர்களுடைய மனதில் எழுகின்ற ஏதேனும் ஒரு கேள்விக்கு மட்டும் ஒரு நேரத்தில் விடை காண முடியும்.

உதாரணத்திற்கு, இவருக்கு திருமணம் நடைபெறுமா, எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கான விடையை அறிந்துகொள்ள முடியும். இதற்கு 1 முதல் 249-ற்குள் ஏதேனும் ஒரு எண்ணைச் சொல்லுங்கள் என்று ஜோதிடர் கூறுவார். அந்த எண்ணிற்கு உரிய உபநட்சத்திர அதிபதியைக் கணக்கிட்டு அதனைக் கொண்டு பலன் உரைப்பார்கள். இந்த முறையில் ஒரு நேரத்தில் ஒரு கேள்விக்கான பதிலை மட்டுமே பெற முடியும். மாறாக எப்போது திருமணம் நடக்கும், எப்போது உத்யோக உயர்வு கிடைக்கும், எப்போது வீடு கட்ட முடியும் என்று ஒரே நேரத்தில் பல வினாக்களுக்கு விடை அளிக்க முடியாது.

?தேவ ரகசியம் என்றால் என்ன?
– லீலாஸ்ரீ, விழுப்புரம்.

நீங்களே தேவ ரகசியம் என்று சொல்லிவிட்டீர்களே., பின் நாம் ஏன் அதனை அறிந்துகொள்ள வேண்டும்? வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளில், பல விடை தெரியாத கேள்விகள் என்பது இருக்கும். அதற்குப் பின்னால் இருப்பது `தேவ ரகசியம்’. உதாரணத்திற்கு, ஒரு மிகப்பெரிய தனவான் இருப்பார். அவர் மிகச்சிறந்த கொடையாளியாகவும், ஏழைகளுக்கு உதவி செய்வதிலும், ஈடுபாடு கொண்டிருப்பார். மிகவும், நல்ல மனிதரான அவருக்கு, வாரிசு என்பது இல்லாமல் இருக்கும்.

`இத்தனை நல்ல உள்ளம் கொண்ட மனிதருக்கு பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லையே’! என்று ஊரார் பேசுவார்கள். அதற்குப் பின்னால் இருப்பதுதான், தேவரகசியம். சாமானிய மனிதர்களாகிய நம்மால் அதற்குப் பின்னால் உள்ள சூட்சுமத்தை உணர்ந்து கொள்ள இயலாது. எல்லாம் இறைவன் செயல் என்று நம்முடைய கடமையை மட்டும் தவறாமல் செய்துகொண்டிருக்க வேண்டும்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஏன் எதற்கு எப்படி…?
தினகரன், ராசி பலன்கள்
தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை – 600 004.

The post ஏன் எதற்கு எப்படி?: பிரசன்ன ஜோதிடம் என்பது என்ன? appeared first on Dinakaran.

Tags : Abhirami Ramachandran ,Vyasarpady ,
× RELATED வியாசர்பாடி எம்.கே.பி. நகர் மாநகராட்சி...